நெற்குப்பை - மலரும் நினைவுகள் - பகுதி 1 .
நெற்குப்பை ஒரு அழகிய ஊர். இந்தியாவில், தமிழ்நாட்டில், முந்தய இராமநாதபுரம் மாவட்டம், தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ளது. நகர் பஞ்சாயத்தாக விளங்கும் இக்கிராமத்தில் சுமார் 2000 பேர் வசிக்கிறார்கள். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் மிகவும் சிறப்பானதொரு இடத்தில் இருந்தது. இங்கு ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நூலகம், தொலை பேசி இணைப்பகம், வங்கி என்று எல்லா வசதிகளுமே உள்ளது. இங்குள்ள சபாபதி வித்யாலயம் என்ற பள்ளியில்தான் நான் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். இப்பள்ளியை மாதவ ஐயர் என்பவர் நடத்தி வந்தார். அவருக்கு சேகர் மற்றும் மோகன் என்ற இரண்டு மகன்களும் பிரேமா என்ற மகளும் இருந்தனர். இவர்களில் பிரேமா அக்கா மிகவும் நல்லவர்கள். மோகன் என்னுடைய வகுப்பு.
இப்பள்ளியில் ராஜாமணி வாத்தியார் ஒருவர் இருந்தார். லட்சுமி டீச்சர், சுப்புணி (சுப்பிரமணி) இருந்தார்கள். இங்கு என்னுடன் லெட்சுமணன், பழனியப்பன், கதிரேசன், மலைசாமி, மீனா, இன்பவல்லி ஆகியோர் படித்தனர்.
ராஜாமணி வாத்தியார் மிகவும் நல்லவர். இவர் சுவாமி சிவானந்தரின் சீடர். நான் இவருக்கு மிகவும் செல்லம். இவர், ஊர் கடைசியில் செட்டி ஊரணி எதிரில் உள்ள பங்களா? வில் குடியிருந்தார். இங்கு பல்வேறு மரங்கள் இருக்கும். இங்கு நானும் எனது ஆச்சி சுசீலாவும் டியூஷன் போவோம். அங்கு உள்ள மாதுளை மரத்தில் சிறு சிறு காய் காய்த்திருக்கும். இந்தக் காய்களை பறிப்பதில் எங்களுக்குள் சண்டை வரும். அப்படி ஒரு நாள் சண்டை வந்தபோது கையில் வைத்திருந்த பிலேடால் ஆச்சியின் புறங்கையில் கீறி விட்டேன். அப்போது ராஜாமணி வாத்தியார் என்னை அடிக்க வந்து விட்டார். இருப்பினும் அடிக்கவில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பேசவில்லை. நான் அழுது கொண்டே இருந்தேன். பிறகு நல்ல அறிவுரை சொல்லி அணைத்துக்கொண்டார். சுசி ஆச்சியின் புறங்கையில் இந்தத் தழும்பு கடைசி வரை இருந்தது.
சபாபதி வித்தியாலயத்தில் நான் படிக்கும் போது நிறைய நாடகங்கள், போட்டிகள் நடத்தப்படும். அதில் என் படகு ஐலசா என்று படகோட்டும் போதே வில்லுப்பாட்டு மாதிரி ஒரு பாட்டு பாடப்படும். அதில் சில செய்திகள் இருக்கும். அதில் நான்தான் முதலில் உட்கார்ந்து படகோட்டுவேன். கூட்டத்தில் முன் பகுதியில் இருக்கும் ஆச்சிமார்கள் அடி, இது நம்ம காக்காவெட்டி வீட்டு மீனி ஆச்சி மகன்ல என்று பேசுவார்கள். அதைக் கேட்கும்போது ஏதோ உலகை வென்றது போல இருக்கும்.
நான் சபாபதி வித்தியாலயத்தில் படிப்பதற்கு முன் மதுரையில் மஹால் எதிரே உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒரு 6 மாதங்கள் படித்திருப்பேன் என்று நினைக்கின்றேன். அது பற்றிய மலரும் நினைவுகள் தொடரும் ........
No comments:
Post a Comment