Sunday, December 12, 2010

Deemed Universities - What is the problem?

நிகர் நிலை பல்கலைகழகம் - என்ன பிரச்சினை?
மதுரை தியாகராஜர் கல்லூரியும் கோவை பி எஸ் ஜி  கல்லூரியும் நிகர் நிலை பல்கலைகழகமாக மாறுவதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல நாளொரு பல்கலைக்கழகம் வந்துகொண்டிருக்கும்போது ஐம்பது ஆண்டுகளை கடந்த, நல்ல சேவை செய்த கல்வி நிறுவனம் பல்கலை கழகமாக மாறுவதில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்படும் என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் நலன் காக்கப்படும் என்று அரசும் துணை முதல்வரும் உத்தரவாதம் அளித்த பிறகும் ஏன் இந்த போராட்டம்? உண்மையிலேயே வேறு பிரச்சினைகள் இருந்தால் அதை அரசிடம் எடுத்து சொல்லி தீர்வு காணலாமே? அதை விடுத்தது வீதிக்கு வந்து போராடுவது கல்வியாளர்களுக்கு அழகா?

நமது நாட்டின் கல்வி நிலை, படித்தோர் விகிதம், பட்ட மேற்படிப்புக்கு வருவோரின்  எண்ணிக்கை இதையெல்லாம் மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளதவர்கள் இல்லை இந்த போராட்டக்காரர்கள்.  நம்மை விட குறைந்த ஜனத்தொகை கொண்ட நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் 5000௦௦௦ க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளது. நமது நாட்டிலோ 500௦௦ க்கும் குறைவான பல்கலைக்கழகங்கள்தான் உள்ளது. உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்தவர்களில் 25 சதவீதம்  பேர்தான் கல்லூரிக்கு வருகிறார்கள். பட்ட மேற்படிப்புக்கு பத்து சதவீதம்  பேர்தான் வருகிறார்கள். இதை எல்லாம் மாற்ற வேண்டும், கல்வி நிலை உயர வேண்டும்  என்று ஏன் இந்த ஆசிரியர்கள் விரும்பமாட்டேன் என்கிறார்கள்?

ஏதோ மேல்நாடுகளில் உள்ள பல்கலைகழகங்கள் எல்லாம் சத்தியவான்கள் போலவும் நம் ஊர் பல்கலைக்கழகங்கள் தான்  மட்டம் எனவும் இவர்களிடையே ஒரு கருத்து உள்ளது. மேல்நாட்டு பல்கலைகழகங்களின் லட்சணம் இங்கு உள்ளவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டாக்டர் பட்டம் கொடுப்பதிலிருந்து தெரியவில்லையா?

கல்வி என்பது தனியார் மயமாகக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அது முதலில் ஆரம்பக்கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். போராடும் இந்த வாத்தியார்களின் பிள்ளைகள்  தனியார் பள்ளியில் சேராமல்  அரசுப் பள்ளியிலும் கார்பொரேஷன் பள்ளியிலும் படிக்கிறார்களா? யார் யாரெல்லாம் அப்படி படிக்கவைத்திருகிறார்களோ அவர்கள் போராடட்டும். மற்றவர்கள் தயவு செய்து விலகி வழி கொடுங்கள். ஒரு நல்ல காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.

வீதி தோறும் கலையின் விளக்கம் ஊர்கள் தோறும் கல்விச்சாலை கேட்ட பாரதியின் கனவை நனவாக்குவோம்! ஜெய் ஹிந்த்!