வர்த்தக நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு:
CSR இந்த சொல் இப்போதெல்லாம் நிறையவே அடிபடத்தொடங்கிவிட்டது. இலாபத்திற்காகவே நடத்தப்படும் இன்றைய நிறுவனங்கள் பெருமையாக சொல்லிகொள்ளும் விஷயம் "கார்போராத் சோஷியல் ரெச்போன்சிபிளிட்டி". திரு. எஸ். குருமூர்த்தி அவர்கள் தனது மார்க்ஸ் டு மார்க்கெட் என்ற புத்தகத்தில் சொல்லியிருப்பது போல கம்யூனிசத்திற்கும் முதலாளித்துவக் கொள்கைக்கும் பெரிய அளவு வித்தியாசமில்லை. இரண்டுக்குமே பொருள் சார்ந்த (materialistic ) வாழ்க்கைதான் முக்கியமே தவிர அருள் சார், ஆன்மீக வாழ்க்கை பெரிதல்ல. இலாபத்தையே மையமாகக் கொண்டு, நுகர்வுக் கலாசாரத்தைதான் இரண்டு தத்துவங்களுமே போதித்தன. ஒரே வித்தியாசம் கம்யூனிசம் எல்லோருக்கும் சமமாக பிரித்துக்கொண்டு எல்லோரும் அனுபவிக்கவேண்டும் என்றது. முதலாளித்துவமோ தனி நபர் அனுபவிக்கலாமென்றது.
இரண்டு ததுவங்களுக்குமே கடவுள் நம்பிகையோ, மறுபிறவியில் நம்பிக்கையோ கிடையாது. தனி மனிதனின் நுகர்வுக்காக படைக்கப்பட்டதல்ல உலகம் என்ற இந்துமத கொள்கை பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது இந்தியாவில் பரவி வரும் புதிய பொருளாதாரக் கொள்கை இந்த முதலாளித்துவக் கொள்கை சார்ந்ததாகத்தான் உள்ளது. அதனால்தான், முகேஷ் அம்பானி 4000 கோடியில் வீடு கட்டுகின்றார். அவரும் அவருடைய குடும்பமும் சேர்ந்து 5 நபர்கள். ஆனால் அவர்களுக்காக அந்த வீட்டில் அறுநூறு பேருக்கு மேல் வேலை ஆட்கள். இதுதான் நுகர்வுக் கலாசாரம்.
ஆனால் சைவ மதத்தில் வந்த நகரத்தார் சமுதாயமோ இதை நன்கு அறிந்துவைத்திருந்தது. நகரத்தார்கள் எவ்வளவுதான் சொத்து வைத்திருந்தாலும் ஒரு கட்டுக்குள்தான் வாழ்வார்களே தவிர ஊதாரித்தனம் செய்ய மாட்டார்கள். ஒரு அளவுக்கு மேல் வரும் சொத்தை கோயிலுக்கும், கல்விக்கும் கொடுப்பார்களே தவிர ஆடம்பரச் செலவு செய்யமாட்டார்கள்.
செட்டி நாட்டு தொண்ணூற்று ஆறு ஊர்களில் உள்ள கோயில்களுக்கு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கும் செய்துள்ளார்கள். இந்த ஊர்களில் மட்டுமல்லாது, மதுரை, திருச்சி, சிதம்பரம், சென்னை போன்ற எல்லா ஊர்களிலும் கல்விச்சாலைகள் பல்கலை கழகங்கள் ஆரம்பித்து உள்ளார்கள். ஆனால் ஆண்டு இதை தர்மம் என்றுதான் செய்தார்களே தவிர இந்த சி எஸ் ஆர் எல்லாம் அவர்களுக்கு தெரியாது. வாழ்க நகரத்தார் சமுதாயம். வளர்க அவர்தம் நற்பணி.