Tuesday, March 24, 2020


1.  உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்!
அன்பு நண்பர்களே!
வணக்கம்! இந்தக் கட்டுரைத் தொடரின் மூலம் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரு மகிழ்வு கொள்கின்றேன்!!.

“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லருலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்
…… என்றான் பாரதி!
பாரதி ஒரு உன்னதமான யுகக் கவிஞன். அவன் ஒரு நேர்மறைச் சிந்தனையாளன். இந்த நாடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவன். தனது மக்கள் எப்படியெல்லாம் ஆனந்தமாய் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவன். மொத்தத்தில் அவன் ஒரு பேராசைக் காரன்.

ஆனால் என்ன செய்வது? அவனோடு பிறந்த இந்தியர்களாகிய நமக்கு அவனுடைய ஆசையில் ஆயிரத்தில் ஒரு பங்கு, இல்லையில்லை லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லையே!. அதுதான் நமது இன்றைய நிலைக்குக் காரணம்.  அவனுடைய பல்வேறு கனவுகளும் நனவாகி உள்ளது. ஒரு நேர்மறைச் சிந்தனை எப்படி செயல்பாட்டுக்கு ஆதரவாக சூழ்நிலைகளை உருவாக்கி அந்தச் செயலை, கனவை நனவாக்கும் என்பது பற்றி பிறகு பார்ப்போம்.




கல்விச் சாலைகள் வைத்தோம்….. கொல்லருலை வளர்த்தோமா?
சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிந்தோம்…. சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்றோமா?
காவியம் செய்தோம்…. காடு வளர்த்தோமா?
ஓவீயம் செய்தோம்…. நல்ல ஊசிகள் செய்தோமா?

என்றால் பல்வேறு துறைகளில் நாம் பின் தங்கி விட்டோம் என்று சொல்வதை விட அவற்றை நாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

நமது கல்வித் திட்டமானது ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப் பட்டது என்பதை அறிவீர்கள் என்று எண்ணுகின்றேன். மெக்காலே கல்வித் திட்டம் என்பது அதன் பெயர். இது பற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம். இப்போதைக்கு இந்தக் கல்வித் திட்டத்தின் முக்கிய நோக்கமாக என்ன இருந்தது என்பதைப் பார்ப்போம். ஆங்கிலேயர்கள் நாடு பிடிக்க வந்தவர்கள். பிற நாடுகளின் செல்வத்தை கவர்ந்து செல்ல வந்தவர்கள். அவர்களுக்கு இந்த நாட்டின் மீது அதன் வருங்காலத்தின் மீது, இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் மீது எந்தவொரு அக்கறையும் இருந்திருக்க நியாயமில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் இந்த நாட்டை அதிக எதிர்ப்பு இல்லாமல், புரட்சிகள் வெடிக்காமல் பரிபாலனம் செய்ய வேண்டுமென்பது மட்டுமே! இதற்கு அவர்களுக்கு ஒரு சரியான வலிமை வாய்ந்த  நிர்வாக இயந்திரம் தேவைப்பட்டது. அதற்கான எல்லா சட்டதிட்டங்களோடு அரசு இயந்திரத்தை உருவாக்கினார்கள். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கு அதிகம் சுயசிந்தனையில்லாத, சொன்னதைச் செய்யக்கூடிய ஏவலாட்கள் இருந்தால் போதும் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு கல்வித்திட்டத்தை வகுத்தார்கள்.

அது மட்டுமல்லாது, அரசாங்கமே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும், அரசாங்கமே உங்கள் ஊர், உங்கள் ஊரின் பாதுகாப்பு, உங்கள் சாலைகள், உங்கள் குளங்கள், கண்மாய்கள் என அனைத்தையும் பார்த்துக் கொள்ளும், நீங்கள் யாரும் எந்தவொரு பொதுக் காரியமும் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். மேலும், இதற்காக அரசாங்கத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றது. அதில் சேர்ந்தால் 8 மணி நேர வேலை, கை நிறையச் சம்பளம், 60 வயதில் ஓய்வு, அதன் பிறகு ஓய்வூதியம் என்று ஆசை காட்டினார்கள். இதனால் மக்களிடம் எதற்காக நாம் சிரமப்பட வேண்டும். எதற்காக நாம் தொழில் செய்து கஷ்டப் பட வேண்டும், அரசாங்க உத்யோகத்தில் சேர்ந்து விட்டால் நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டலாமே என்ற எண்ணம் மேலோங்கியது.

இதனால்தான், இன்றும் நம் மக்கள் அரைக்காசு உத்தியோகமுன்னாலும் அரசாங்க உத்தியோகம்; கால் காசு உத்தியோகமுன்னாலும் கவர்ன்மெண்டு உத்தியோகம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் இதை முழுவதுமாக ஒப்புக் கொள்ள உங்களில் ஒரு சிலருக்கு தயக்கமிருக்கலாம். எதிர் கருத்துக்களும் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். உங்கள் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கின்றேன். எனினும் எனது கருத்துக்கு வலுச் சேர்க்க ஒரு சின்ன நிகழ்வை இங்கே விவரிக்க விரும்புகின்றேன்.

ஒரு பொறியியல் கல்லூரி. அங்கே ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூடியிருந்தனர். அவர்களிடம் உங்களின் லட்சியம் என்ன? ‘கோல்’ என்ன என்று கேட்டேன். ஒரு விதமான அமைதி நிலவியது. யாரும் பதில் தர முன்வரவில்லை. பெரும்பான்மை மாணவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான லட்சியம் இல்லை என்பதுதான் உண்மை. அது பற்றி இன்னும் சற்றே அழுத்திக் கேட்ட பின்னர் ஒரு மாணவன் எழுந்து ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்றார். பிறிதொருவர் வளாக நேர்முகத்  (Campus Interview) தேர்விலேயே ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்றார்.

நல்ல வேலை என்றால் என்ன? எது நல்ல வேலை? அதற்கு என்ன வரையறை-அடையாளங்கள் என்று கேட்டேன். மீண்டும் ஒரு அமைதி. அப்போது ஒரு மாணவி எழுந்து நல்ல வேலைக்கு அடையாளம் “LOW WORK – HIGH SALARY” அதாவது குறைவான வேலை – கை நிறையச் சம்பளம் என்றார். நான் சிரித்து விட்டு “கடவுளுக்கு நன்றி சொல்வோம் – இந்தப் பெண் நல்ல வேளையாக “NO WORK’ என்று கேட்கவில்லை ‘LOW WORK’ என்று கேட்டுள்ளார் என்றேன். தொடர்ந்து அப்படி ஒரு வேலை இருக்கிறதா? அதை யார்தருவார்கள் என்று கேட்டேன். அந்தப் பெண் அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தார். அரசாங்கத்தில் தருவார்கள் என்று தயங்காமல் சொன்னார். இதுதான் இன்றைய இளைஞர்களில் பெரும்பான்மையானோரது விருப்பம். அதுமட்டுமல்ல பெரும்பான்மைப் பெற்றோர்களின் விருப்பமும் அதுவே.

ஒரு இளைஞன்/இளைஞி படிப்பு முடிந்தவுடன் தன் பெற்றோரிடம் சென்று நான் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என்றிருக்கின்றேன் என்று சொன்னால் எத்தனை பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்துகின்றார்கள். அதெல்லாம், நமக்கெதுக்குப்பா, பேசாமல் ஒரு வேலையில் சேர்ந்துவிடு, நிம்மதியாக இருக்கலாம் என்று சொல்லும் பெற்றோர்களே அதிகம். அதைக் கூட விட்டு விடலாம். பெண்ணுக்குத் திருமணம் என்று வரும்போது எத்தனை பெற்றோர்கள் சொந்தத் தொழில் செய்யும் மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்? ஒரு “நல்ல வேலை” யில் இருக்கும் பையனைத்தானே தேர்ந்தெடுக்கின்றார்கள்?

என்ன வாசகர்களே! உங்களுக்கும் திருமணம் கை கூடுமா? பெண் கிடைக்குமா? என்று பயம் வந்து விட்டதா? பயப்படாதீர்கள். அடுத்த இதழில் சந்திப்போம்.
                                -கேஆர்ஜி
                                krg@aathmaacademy.com


No comments:

Post a Comment