Saturday, November 27, 2010

Endru theerum intha thalaimai panjam?

என்று தீரும் இந்த தலைமை பஞ்சம்? 
ஒரு தலைவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிறையவே தகவல்கள், புத்தகங்கள் வந்துவிட்டது. இருந்தபோதும் கடந்த 40௦ ஆண்டுகளாக ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தமிழகம் தவிக்கிறதே ஏன்? பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்யமூர்த்தி போன்றோர்கள் இருந்த இடத்தில ஏன் இன்று வழிநடத்தி செல்ல ஒரு நல்ல தலைவன் கிடைக்கவில்லை?

ஒரு நல்ல தலைவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? தனது கீழ் உள்ள தனது தொண்டர்கள், மக்கள் நலன் கருதி, தனக்குப் பிடிக்கவில்லை என்றால் கூட அவர்களுக்காக சில இடங்களில் விட்டுக் கொடுத்து போக வேண்டும். நாட்டு நலன் கருதியவர்கள் அப்படித்தானே இருந்திருக்கிறார்கள். 

நம் நாட்டு விடுதலை போரின் உச்ச கட்டம். இந்தியாவை இரண்டாகப் பிரித்துத்தான் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பது பிரிட்டிஷாரின் ராஜ தந்திரம். ஜின்னாவும் அதையே கேட்கிறார். மகாத்மா காந்தியோ ஒரே இந்தியாதான் வேண்டும் என்கிறார். சிக்கலைத் தீர்க்க வட்ட மேஜை மாநாடு கூட்டப்பட்டது. காந்தியும் ஜின்னாவும் லண்டன் செல்கிறார்கள். அங்கே அரசியாரின் முன்னிலையில் பேச்சு நடக்கிறது. முடிவு ஏதும் எட்டப்படவில்லை. பொழுது சாய்ந்துவிட்டது. எனவே நாளை பேசலாம் என்று மற்றவர்கள் எழுந்துவிட்டார்கள். இருந்தபோதிலும் மறு நாளாவது ஒரு நல்ல முடிவு வர வேண்டும் என்றால் இவர்களில் யாரவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆகையினால் இவர்கள் இருவரும் இன்று மாலை தனியே சந்தித்துப் பேசினால் நல்லது என்று முடிவு செய்யப்பட்டது. 

அப்படியெனில் எங்கு சந்திப்பது என்று யோசித்தபோது காந்தி தான் தங்கியிருக்கும் விடுதிக்கு ஜின்னாவை அழைத்தார். ஜின்னாவோ தான் தங்கியிருக்கும் இடத்திற்கு காந்தியை வருமாறு கூறினார். இருப்பினும் காந்தி இருக்கும் இடத்திற்கு ஜின்னா போவது என்று முடிவாயிற்று. ஜின்னாவும் உடனே அங்கு நான் வரும்போது என்ன தருவீர்கள் என்று கேட்க காந்தியும் எது வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறிவிட்டார். எதனை மணிக்கு சந்திப்பது என்பதை முடிவு செய்தவுடன் இருவரும் தங்கள் தங்கள் இடத்திற்கு திரும்பிவிட்டார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு ஜின்னா, காந்தி இருந்த இடத்திற்கு வந்துவிட்டார். காந்தியும் எழுந்து சென்று மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டவுடன் ஜின்னாவும், தான் கேட்பதை காந்தியால் தரமுடியாது என்ற நினைப்புடன் சற்றே கிண்டலாக விஸ்கி அன் சோடா என்றார். உடனே அண்ணல் காந்தியடிகள் ஒரு பாட்டில் விஸ்கியும் ஒரு சோடா பாட்டிலையும் எடுத்து ஜின்னாவிடம் நீட்டி, மன்னிக்கவும் எனக்கு எப்படி ஊற்றுவது என்று தெரியாது நீங்களே ஊற்றிகொள்ளுங்கள் என்றாராம். தேச ஒற்றுமைக்காக காந்தி தன் வாழ் நாளில் தன் கையால் தொட்டிராத மது பாட்டிலை எடுத்துக் கொடுத்தார். 

இன்று, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தான் ஒரு கிறிஸ்துவராக இருந்தும் தீபாவளி கொண்டாடுகிறார். வாழ்த்து சொல்கிறார். ஆனால், நம் முதல்வர் அவர்களோ, கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டே, தலையில் குல்லா வைத்துக்கொண்டு, பக்ரித், ரம்ஜான் கொண்டாடுகிறார். அந்த மதத்தவருக்கு வாழ்த்து சொல்கிறார். ஆனால், இந்து மதப் பண்டிகைகளான தீபவளிக்கோ, விநாயகர் சதுர்திக்கோ வாழ்த்துச்  சொல்ல மறுக்கிறார். (விநாயக சதுர்த்தியை முன்னிட்டு - மன்னிக்கவும், விடுமுறை தினத்தை முன்னிட்டு கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்சிகள் நடத்தி விளம்பர வருமானத்தை பார்த்துக்கொள்வது - அது தனி) வாழ்த்து சொல்லும் எதிர்கட்சித் தலைவியைப் பார்த்து, இதுதான் பெரியார், அண்ணா வழி நடப்பதா என்று கேள்வி கேட்கிறார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று அவரது அரசியல் ஆசான் சொல்லியது மறந்து போயிற்று போலும். நீங்கள் ஒரு கட்சியின் தலைவர் என்றால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள், ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் இந்துக்களும் வாழ்த்து சொல்லுங்கள், ஒபாமாவைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள் என்று முதல்வரிடம் யார் சொல்வது? 

குடும்ப அரசியலை எதிர்த்து கொதித்து எழுகிறேன் என்று சொல்லும் எதிர் கட்சித் தலைவியோ தனது தோழியின் குடும்பத்தை கட்டிக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறார். பாட்டளிகளின் தோழன் என்று அரசியலுக்கு வந்தவரோ தனது மகன், மருமகள் என்று இசித்துகொண்டு இருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று வந்த புரட்சிக் கலைஞரோ தனது மனைவி, மைத்துனன் என்று ஒரு தமிழ் பட பாடல் காட்சி வெள்ளை தேவதைகளை போல் ஒரு கூட்டத்தையே அழைத்து வருகிறார். வைகோவோ என்ன செய்வது, யாருடன் கூட்டு வைப்பது என்று தெரியாமல் மயங்கி நிற்கிறார். மாவீரனோ, இங்கு இருக்கும் தமிழர் நிலை மிகவும் நன்றாக இருப்பதாக நினைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரைக்  காப்பாற்றப்  புறப்பட்டுவிட்டார். 

இங்கு இருக்கும் சினிமா பட உலகத்திற்கோ கலைஞருக்கு நன்றி சொல்லவே நேரம் போதவில்லை. மின் ஊடகங்களுக்கோ மெகா தொடரை விட்டுவிட்டு வெளியே வரவே முடியவில்லை. பத்திரிகைகளில் ஒன்றிரண்டு மட்டும் ஈனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது.  இளிச்சவாய் தமிழனோ இன்னும் என்ன, என்ன இலவசம் கிடைக்கும் என்று அண்ணாந்து நின்றுகொண்டு இருக்கிறான். 

விதியே இந்தத் தமிழ் சாதியை என் செய்ய நினைத்தாய்? 

என்று தீரும் இந்த தலைமைப் பஞ்சம்? 


No comments:

Post a Comment