மலரும் நினைவுகள் - ௨
நாங்கள் அப்போது 1960 மதுரையில் சுப்ரமணியபுரம் என்ற இடத்தில் இருந்தோம். இப்போது மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள இரண்டாவது பாலத்தில் இருந்து இடது புறம் திரும்பிப்போனால் இடது புறம் உள்ள நாலாவது அல்லது ஐந்தாவது வீடு என்று நினைக்கின்றேன். அங்கு நான், சிட்டாச்சி, சுசியாச்சி ஆகியோர் இருந்தோம். அங்கே கமலாச்சி வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. அவர்கள் வீட்டருகே விறகுக்கடை இருக்கும். அங்கு சென்றுதான் விறகு வாங்கிவர வேண்டும். நானும் சுசிஆச்சியும் போய் வாங்கி வருவோம். ஒரு தூக்கு என்பது 20௦ கிலோ . விறகுக்கடைக்கு அருகே கமலாச்சி வீடு இருந்ததால் அங்கு சென்று சற்று நேரம் விளையாடுவோம். அப்போது கமலாச்சி மகன் ராமன் கை விரலகளை நறுக்கென்று கடித்துவிடுவான்.
அங்கு ராதா பால் ஐஸ் வண்டி வரும். வயதான கிழவர் ஒருவர் தள்ளி வருவார். எனக்கு தினமும் ஐஸ் வாங்கவேண்டும். ஐந்து பைசா ஒரு ஐஸ். தினமும் அண்ணன் காசு தந்துவிடுவார்கள். வீட்டிலிருந்து சற்று தூரத்தில் பள்ளி கூடம் இருந்தது. அங்க ஒன்னாப்பு படித்தேன். சில மாதங்களில் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு மஹால் எதிரே உள்ள மாடி வீட்டுக்கு குடி போய்விட்டோம். அங்கு போன முதல் நாள் அந்த ரோட்டில் அதே ராதா ஐஸ் வண்டி வந்தது. அவரைப் பார்த்ததும் நான் மாடியில் போய் காசுவாங்கிக் கொண்டு வந்து, ஐஸ், ஐஸ் என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினேன். அவர் என்னைய்ப் பார்த்ததும் ஏன்டா சுப்ரமணிபுரத்தில் இருந்து ஓடி வருகிறாயா என்று கேட்டார். அந்த நிகழ்வு இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.
மஹால் வீட்டில் இருக்கும்போது பாலஸ் ரோடின் முனையில் இருந்த முனிசிபல் பள்ளியில் படித்தேன். அப்போது ஒரு நாள் ஒரு பையன் என்னை உரண்டை இழுத்துவிட்டான். உடனே பள்ளியில் இருந்து வேகமாக ஓடி வந்து பைக்கட்டை அண்ணனிடம் கொடுத்துவிட்டு திரும்ப ஓடிபோய் அவனை ஒரு அடி அடித்துவிட்டு வந்தேன். அந்த வீட்டில் இருந்தபோது மஹால் முன்புறத்தில் உள்ள பூங்காதான் எங்களுக்கு காலை மாலை எல்லாம். அங்கு நடுவில் ஒரு மீன் தொட்டி, சிறிய கிணறு வடிவத்தில் இருக்கும். அங்குதான் பல் துலக்குவதே. இப்போது அந்த இடமே இல்லாமல் போய்விட்டது.
அந்த வீட்டில் இருக்கும்போதுதான் கீழே கிணற்றில் தண்ணீர் இறைப்போம். நானும் சுசி ஆச்சியும் போட்டி போட்டுகொண்டு எத்தனை இரவையில் வாழி மேலே வருகிறது என்று போட்டி போட்டு கொண்டு இறைப்போம். அவ்வாறு ஒருமுறை நான் இறைக்கும் போது, சுசி ஆச்சி வாழி வராது என்று நினைத்துக்கொண்டு தலையை குனிந்து கிணற்றுக்குள் பார்த்துக் கொண்டிருந்தபோது வாழி எதிர்பாராமல் மேலே வந்து ஆச்சியின் நெற்றியில் அடித்து விட்டது. அதனால் நெற்றியில் இரண்டு அங்குல நீளம் வெட்டி விட்டது. அந்தத் தழும்பு கூட கடைசி வரை இருந்தது.
அப்போது எனக்கு தேங்காய் சட்னி என்றால் ரொம்பப் பிடிக்கும். தினமும் இட்லி, தேங்காய் சட்னி இருக்க வேண்டும். அதுவும் மாலையில் பள்ளி விட்டு வரும்போது இட்லியும் சட்னியும் இல்லாவிட்டால் அவ்வளவுதான். அப்போதெல்லாம் ஆத்தாவுக்கு மிகுந்த தலைவலி. எந்நேரமும் படுத்துக்கொண்டு அல்லது வாந்தி எடுத்துக்கொண்டுதான் இருக்கும். சிட்டு ஆச்சிதான் எப்போதும் என்னை அன்பாகப் பார்த்துக்கொள்ளும். தம்பி வருவான் என்று காலையில் இட்லி அவிக்கும் போதே இரண்டு இட்லியும், சட்னியும் எடுத்துத் தனியாக வைத்து விடும்.
ஆத்தாவுக்கு அப்போது நாற்பது அல்லது நாற்பது இரண்டு வயதுதானிருக்கும். இருப்பினும் தீராத தலைவலி எதனால் என்று தெரியாததால் பல் தான் காரணமாக இருக்கும் என்று அனைத்து பல்லையும் பிடுங்கிவிட்டார்கள். பல் கட்டுவதற்கு கால தாமதமானது. இந்நிலையில் மிகுந்த தலை வலி, வாந்தி இருப்பதால் அதிகம் சாப்பிடாது. ஒரு நாள் கீழே உள்ள ஹோடேலில் ஒரு இட்லி வாங்கி வரச் சொன்னது. அப்போதெல்லாம் இரண்டு இட்லியாகதான் தருவார்கள். ஆனால் ஆத்தா பிடிவாதமாக ஒரே ஒரு இட்லி போதும் என்று வாங்கிவர சொல்லி சுசி ஆச்சியை அனுப்பியது. ஹோட்டல் காரரும் முதலில் ஒரு இட்லி தர முடியாது என்று சொல்லி பின்னர் கொடுத்து விட்டார். வாங்கி வந்த இட்லி சுவையாக இருந்ததாலோ அல்லது பசியின் காரணமாகவோ ஆத்தா மறுபடி ஒரு இட்லி வாங்கிவரச் சொல்ல, சுசி ஆச்சியும் போய் கேட்க ஹோட்டல் காரன் சண்டைக்கு வந்து சுசி ஆச்சியை திட்டி விட்டான். சுசியும் ரொம்ப நேரம் அழுதுகொண்டே இருந்தது ஞாபகம் வருது.
இந்த நிலையில் அண்ணனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நாங்கள் நெற்குப்பைக்கு சென்றுவிட்டோம். மீண்டும் நெற்குப்பை நினைவுகள் தொடரும்.
No comments:
Post a Comment